உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 செப்டம்பர், 2020

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம்

வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் ''தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல.

நூல்கள் காலத்தை ஒட்டியது. காலத்தின் நோக்கத்தை அடைய கவிதைகளை உயர்த்த வேண்டிய தேவை உள்ளதால் கருத்தும் அதைச் சார்ந்த முரண்களும் விவாதிக்கப்படாமல் இருக்கிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்ட சமூக அமைப்பு, எத்தகைய சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்தியா மிகச் சரியாக முன்னுதாரணம்.
தமிழ்தேசியம் பேசும் நாட்டில் சமூக சிக்கல்கள் சின்னங்களாக உருவெடுக்கிறது. நாளடைவில் அதுவே பழக்க வழக்கங்களை முன்வைத்து கலாச்சார மையமாக வழியமைத்து நாகரீகமாக பழிவாங்குகிறது.
வள்ளலாரின் கூற்றுக்களை ஒருவேளை ஏற்றுக் கொண்டிருந்தால் பெரியாரின் பகுத்தறிவு ரீதியான கொள்கைகளுக்கு தமிழகத்தில் வேலையே இல்லை!
சமூக பார்வையில் இருந்து எறியப்படும் ஒவ்வொரு பார்வையும் எங்கேயோ ஒரு பெரியாரை, வள்ளலாரை, தீரனை தோற்றுவிப்பதில் தவறேதும் இல்லையே. மதம் முழுக்க முழுக்க ஒரு கட்டமைப்பின் மூலம். அதற்கு முரணாக எழும் பகுத்தறிவு மத மூடநம்பிக்கைகளை களைவதில் என்ன தவறு இருக்கிறது?
மதம் என்பது சீரமைப்போ சிக்கலோ? மனித சங்கிலியின் தேடல் மேலோங்குவதை இரண்டும் வெவ்வேறு கோணங்களில் புனரமைத்தால் நன்று.

கம்ப உளவியல்

கம்ப உளவியல்

நாம் உறவுகளில் நம்மை முழுமையாக திளைக்கும் பொழுதுகளில், நன்மை, தீமை மற்றும் சூழ்ச்சி போன்றவற்றால் மூழ்கடித்து உண்மையை பறைசாற்ற முடியாமல் திணறுகிறோம். நான் அதிகளவில் கேட்டு படித்த இதிகாசங்களில் வரலாற்றுப் பெருமை மிகுந்த கம்பராமாயணம், மகாபாரதம் மற்றும் சிலப்பதிகாரம் என்னை ஒரு திறவுகோல் போல மாற்றியது. அதிலும் குறிப்பாக உளவியல் ரீதியாக பல முகங்களின் பன்முகத்தன்மையை நான் அலசி ஆராய இவை எனக்கு பெரிதும் உதவுகின்றன.

நாம் மட்டுமல்ல, அனேக ஜீவராசிகளும் தாயின் மீது அதீத பாசம் கொண்ட பக்தர்கள் என்பதை அறிவோம். தாய் என்பவள், உயிர்ப்புடன் நம்மை உயிர்வித்த சிரம் மட்டுமல்லாமல் அவள் நம்முடைய ப்ராணமாகவும் மாறியவள். ஆனால் கம்பனை படிக்கையில், கைகேயி செய்த தவறினால் அவளின் தாய்மையை அலச நான் முற்ப்பட்டேன். இந்த ஏகாந்த எண்ணம் எழுந்த நிலையில், இது சரியா தவறா என்று நான் யோசனையின் நீட்சியில் கிடந்த வேளைகளில், கம்பனே அதற்கான உபாயத்தை நல்கினான்.
கைகேயி, ராணியாகவே பிறந்து, வளர்ந்து, பிறகு நாடாலும் மன்னனின் துணையாக இருக்க வாய்ப்பு பெற்றவள். ஆனால் அவளுக்கு அதுவே பெரிய தலைக்கணமாக மாறி, ராஜ்ஜியத்தை பற்றி கடைசி வரை தன் ராணி அந்தஸ்தை பெற திட்டம் வகுத்து மேடையேற்றினாள். கைகேயி புதல்வன் பரதன், கோசலையின் புத்திரன் ராமன். ராமன் முதல் புதல்வன் என்பதாலும் அவன் பவித்திர சூத்ரதாதி என்பதாலும் அவனே முதலில் நாடாளுவான் என்பதை அறிந்து கொண்டு அவனை வேஷமிட்டு பாசத்துடன் வளர்த்தாள்.
ஒரு நாள் அரண்மனையில் ராஜ்ய உரிமை சண்டையாக உருவெடுக்கவே, கைகேயி மிகு‌ந்த கவலை உற்றாள். இதற்கு காரணம் ராணி என்கிற பெருமை பறிபோகுமோ என்றதால் தான். ஒருவேளை ராமன் அரசனாக மகுடம் சூடினால், கோசலையின் மீது மட்டுமே அதிகபட்சமாக கவனமும் மரியாதையையும் இருக்கும் என்பதை மந்த்தரை, அதாவது கூனி கலகமூட்டவே வெகுண்டெழுந்து கலகத்தை பெரிதாக மாற்றினாள். அதனால் ராமன் வனவாசம் செய்ய முடிவானதும் பரதனே நாடாள மன்னன் ஒப்புக் கொண்டார்.
ராமன் வனவாசம் செய்ய புறப்பட்டான். ஆனால் இங்கு தான் தாய்மையின் தன்மையை கம்பன் அழுத்தமாக நிறுவுகிறான். செய்தி அறிந்து அரண்மனை சேர்ந்த பரதன், தன் தாயிடம் கேட்டான். அவளோ, அதற்கு தகுந்தபடி பதில் சொல்லி சமாளிக்க முடியாமல் கோபம் கொண்டு வார்த்தைகளை விட ஆரம்பித்தாள்.
பரதா, நான் ராமனை நாடாளவிடாமல் உன்னை ராஜாவாக நிலைநாட்ட எண்ணம் கொண்டு அதை இன்று முடித்து விட்டேன் என்றாள். பரதனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட அவள் உனக்காக நான் செய்ய சூழ்ச்சியை நினைத்து பாராட்டாமல் இப்படி கோபத்தில் குதிக்கிறாயே என்று கேட்கையில்
கீண்டிலன் வாய் அதுகேட்டும் நின்ற நான்
என்று கூறவே கைகேயி அதிர்ந்து போனாள். அதாவது நீங்கள் இவ்வளவு பெரிய சூழ்ச்சியை செய்ததாக கூறும்போது, கூறிய உங்கள் வாயை கிழிக்காமல் நிற்கிறேனே ஏன் தெரியுமா, என் அண்ணன் ராமன் கோபித்து கொள்வார் என்பதால் தான். நீ தாயல்ல பேய் என்று சபித்துக் சென்றான்.
இங்கே என்ன செய்தியை கூற வருகிறேன் என்றால், தவறு செய்யும் மனிதர்களை தண்டனை கொள்வது தான் தர்மமும் கூட. ஆனால் காப்பிய நோக்கத்திற்காகவும் தாய்மையின் தன்மையை இகழந்திட கூடாது என்பதாலும் கம்பன் இப்படி எழுதியுள்ளான் என்று நினைக்கிறேன்.
தவறு கண்டிக்கத்தக்கது. அது தாயாகவே இருந்தாலும் சரி. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே கம்பனுக்கு இலக்கியம் தந்த எழுதுகோல். ஆனால் கம்பனும் தாய்மையின் படைப்பள்ளவா. அதனால் தான் அவன் தண்டனையை எதிர்த்து குற்ற உணர்ச்சியை கைகேயிக்கு விளைவித்தான்.
வாழ்வியல் இலக்கணத்திற்காக எழுத்தானியுடன் நான்

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

என்ன வரையறை இது

Period Pain Treatment


என்ன வரையறை இது

இது என்ன வரையறை இது என் உரிமை

எளிதில் கடந்து விடக் கூடிய வலி இல்லை இது. ஆனால் அந்த வலிகளை விட நடமாடும் அது குறித்த வரையறைகள் தான் அதிகம் வலிகளை உண்டாக்கும்

ஊரறிந்து உணவிட்டு பலநாட்கள் பொத்தி பொத்தி வைத்த கலனொன்று திடிரென கழன்று விழுகையில் யாதொன்றும் அறியாமல் தான் நின்றேன்

பிறந்த வலியினும் கொடிய வலி இதை யாருமே அறியாத போது தான் ஏற்படுகிறது. அறியாமை கூட அறிந்திட வாய்ப்பு உள்ளது. அதை அறிமுகப்படுத்திய எவரும் அறிகிலை. தவறு என்னுடையதா? விழுந்து சரிந்து பின் எழுந்து நிமிர்ந்தது அன்றொரு நாள் மட்டுமே

பிறகு, நிமிர்ந்தபொழுது திமிரென்றும் நடந்தபோது கர்வமென்றும் ஓடினபோது தலைக்கணமென்றும் வசைபாடிய மானிடர்களின் வாயில் நான் அபத்தமாக நிற்கிறேன்

பருவ வயதில் பாழாப்போன பரீட்சையமற்ற பாசவார்த்தைகள்.
பழகிய பிறகு பருவத்தில் விளைத்திடும் பசிவார்த்தைகள்.
விழுந்துவிட்ட நேரத்தில் சரிந்துப்போனது சாம்பலொன்று.
எழுந்தபோது எட்டிப்பார்த்த மழையாய் கலைந்தது. 
கலகலத்துப் போன என் கண்கள் ஏனோ கருக ஆரம்பித்தது.
கலையாடிய கைகள் கட்டப்பட்ட சருகாய் ஒடிந்தது.
நடைசூடிய கால்கள் மெல்ல இறங்கியது

இடுப்புக்கிடையில் ஒரு அழுத்தமான நம்பிக்கை. அலாதிய வலிகளின் உல்லாச ஓசை. பின்வாங்கும் பெருமூச்சு. பிதற்றிக் கொண்ட தொடைகள். பிணைக்கைதியாய் மற்றவர்கள் பார்வை

ஒளிந்து ஒளிந்து ஓடுகையில் ஓட்டம் கூட அடம் பிடித்த நிமிடங்களில் நான் அனுபவித்த வலிகளை அகற்ற கூட ஆட்கள் இல்லை. ஆமாம் ஆட்கள் இருந்தும் இல்லை

நின்ற இடம் ஒரு புனிதமான இடமாம். அதனால் தீட்டு பரவி திருத்தம் செய்திடுமாம், பாவம் அவர்களுக்கு புரியவில்லை, அங்கும் அந்த வலிகளை தாங்க முடியாமல் கல்லான கடவுளை

போதும். இது தீட்டென உணர்ந்தால் படைத்த அவன் இதில் பாவத்தை கழுவிக்கொள்ளட்டும்

மாதவிடாயே!
நீ என்ன செய்தாய், பாவம் நீ.
உன் வலிகளை விட இவர்களின் வரையறைகள் எனக்கு வலிக்கிறது! 😢

எங்கே கலாச்சாரம்

Embracing Gender Equality Through Social Entrepreneurship


எங்கே கலாச்சாரம்

அப்பழுக்கற்ற பவித்ரதத்தை போல ஊளையிடும் உயர்ந்த குடி மக்களே! காதலுக்கு கண்ணில்லை என்று சொன்னதே நீங்கள் தான். அப்புறம் எங்கே கலாச்சாரம் கறைபடிந்தது? எதை நீங்கள் கலாச்சாரம் என்று கருதுகிறீர்கள்? சிந்துசமவெளி நாகரீகத்தை மேம்படுத்த தான் நீங்கள் உழைக்கின்றீர்களா? மெசபடோமியாவின் பழக்கவழக்கங்களை பாதுகாக்க தான் பிறந்தீர்களா? லெமூரியாவின் பண்பாட்டை பண்படுத்த தான் படையெடுக்கிறீர்களா?

பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் கலாச்சாரம் என்ற தார்ப்பறியத்தை அறியாமல் அதெப்படி கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்கிறீர்கள் கலாச்சாரம் சீரழிகிறது என்று? மனித கழிவுகளை அகற்ற மனிதனை தேடும் நீங்கள் கலாசார காப்பகங்கள்?. கலப்படங்களை கலக்கம் இல்லாமல் சேர்க்கும் நீங்கள் பாதுகாவலர்கள்?. மனதில் மதிலிட்டு வீடுகளை தனிமைப்படுத்தி வீழும் நீங்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சீர்குலைக்க வந்த சீர்கேடுகள்.

உங்களைப் பார்த்து சிரிப்பதை சகித்துக் கொள்ளாத நீங்கள் தான், சகிப்புத்தன்மை பற்றி மேடைபோட்டு வாய்கிழிய பேசுகிறீர்கள். உங்கள் பேச்சைக் கேட்டால் எனக்கு அருவருக்கத்தான் செய்கிறது. இதென்ன தேசம்? உங்கள் வரையறைகளை தாண்டிய வரலாற்றில் காணப்போன பக்கங்களில் நீங்கள் கூறும் அத்தனையும் உள்ளது. அப்படி மருவிய ஒன்றைத் தான் நீங்கள் காலங்காலமாக கொண்டாடும் யாவும்

அதெப்படி மொழிகளை கடந்து வந்த நீங்கள், இனத்தின் அடையாளம் இதுவல்ல என்று உரிமையுடன் வழக்காடுகிறீர்கள். கலாச்சாரமே உனக்காவது தெரியுமா இவர்கள் யாரென்று. பண்பாடே நீ உணர்ந்தாயா இவர்கள் பழக்கவழக்கங்கள் யாவென்று. நாகரீகமே நீயாவது சொல் இவர்களின் நவநாகரிக நரித்தனத்தை? மகரந்தச் சேர்க்கை தனிப்பட்ட உரிமை. அது பிறப்புரிமை. அதுவே தனிமனித சுதந்திரம்

பழக்கவழக்கங்களை பண்பாடாக மாற்றி அதை கலாச்சாரமாக முன்னெடுத்து பின்னாளில் நாகரீகமாக வளர்ந்த எதையும் நீங்கள் அழித்துவிட முடியாது. உங்களுக்கு நடந்தால் உறவு, மற்றவர்களுக்கு நடந்தால் காமமா. அழுக்குகள் கூட உங்களை கண்டால் அருவருக்கும், ஒருவேளை உங்கள் அனுமானங்களை காதுகொடுத்து கேட்டால்.

உங்கள் தகாத உறவுகள் அர்த்தப்படும் என்றால், என் உறவு அரத்தப்படாதா? உடலின் தேவையை குறிவைத்த உங்கள் உறவுகளை விட உயிரோட்டம் நிறைந்த என் காதல் ஒன்றும் இளைத்ததில்லை. படைத்த இறை பாலினம் யாதென தெரியாத நீங்கள் பாலின சமத்துவம் பற்றி பேசாமல் இருப்பது தான் நல்லது.

நவநாகரிக கலாச்சார சீர்திருத்தவாதிகளே நான் உரைப்பது கேட்டீறோ!

இது தான் பாலினமா?

To achieve gender equality, we must first tackle our unconscious ...


இது தான் பாலினமா?

குறியீடுகள் இனப்பெருக்கத்தின் தார்ப்பறியம் என்றால், தேவையை நிறைவு செய்த பிறகு இனப்பெருக்கத்தை நிறுத்த வேண்டுமே


ஆனால் அதற்கு பின்னும் நடைபெறும் கூடல்கள், தேவைக்காக தான் நடக்கிறதா இல்லை இன்னும் தேவை இருக்கிறது என்று நடக்கிறதா.
உறவு என்று சொல்லி அசிங்கமான வார்த்தைகளை கொட்டாதீர்கள்

எதற்காக கூடல்கள் நடக்கிறது என்பதை அறியவில்லை.
எது உறவு என்பதை கூட அறியவில்லை.
உபதேசம் உரைக்க ஊருக்கு பத்து பேர் பைத்தியமாக சுற்றுகிறார்கள்.
பாலினங்களை படைத்த இறை பாலினம் யாதென அறிவீர்களா

அதற்கு குறியீடுகள் உண்டென வழிபடுபவர்கள்,
உண்மையில் அப்படி தான் இறை இருக்க முடியும் என்று கூற முடியுமா?

எதை முன்னிறுத்தி, உடலுறவுகள் நடைபெறுகிறது.
இது பாலின சமத்துவமா இல்லை பாலின கலாச்சாரமா. 
தன்னை முன்னிலை படுத்த நடக்கும் வேட்டையா.
வேடிக்கை மனிதர்கள் விவரம் அறிவார்களா 
இல்லை விவகாரம் விளைக்கிறார்களா

உண்மை யாதென இறைக்கு தெரியுமோ. ஒட்டிக் கொண்ட சதைகள் பாலுணர்வை தூண்டுகிறது என்றால், உணர்வுகளை குறியீடுகள் நிர்ணயம் செய்கிறதா இல்லை உணர்வுகளை வெளிப்படுத்த குறியீடுகள் உள்ளனவா

அர்த்தங்கள் அறிந்திட தகவல்கள் உள்ளனவா
அறிந்திட்ட பிறகு அதன் பின்னனி புலப்படுமா

உணர்வுகளை உள்ளடக்கிய ஊண் கொண்ட பிண்டம், எத்தனை பிரிவினையை நிகழ்த்துகிறது. அதற்காக அலைந்திடும் இந்த காம கடும்புனல் கூட்டம் கருதிடா உணர்வுகளை காமத்தின் நிலைப்பாடு என நினைக்கும் புரிதல் முறையானதா. 

இச்சைக்கு பிச்சையாகும் இந்த கூட்டம் எதைத்தான் அறிந்து வைத்திருக்கும்?

அட காமமே,
படுத்த படுக்கை களைவதற்குள் உன்மேல் விழும் அத்தனை குற்றச்சாட்டும் உன்னை மையப்படுத்தி நடக்கிறதென இந்த கூட்டம் முறையிடும் அவலத்தை நீ யாரிடம் முறையிடுவது என புலம்புவதற்கு நான் அடியெடுத்து கொடுக்கிறேனா

முன்னுதாரணமாக இருக்கும் இவர்கள் உன்னை முன்னுக்குப் பின் முரணாக குறைகூற நீ காரணமா.
கடவுளுக்கும் அடையாளம் தெரியாத இனம், கழுதைக்கு கால்கள் மூன்றென சொன்னால் நான் நம்புவேனா?

மஞ்சளில் இறை

In broad daylight, manual scavengers dip deep into sewage-filled ...


மஞ்சளில் இறை

அருவருக்கத்தான் செய்கிறது?

நம்மை போன்ற உயர்ந்த மனம் கொண்டவர்களை கண்டால் அருவருக்கத்தான் தான் செய்கிறது

இதென்ன தேசம்?
தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த 5000 கோடியில் செலவு செய்து அதிவேக இணைய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி என்னத்த சாதிக்க போறீங்க?

இது தான் தொழில்நுட்பமா?
இதற்கு தான் படித்து பட்டம் பெற்ற விஞ்ஞானிகளா? 
சௌசம் இல்லாமல் சிறுநீர் பெய்து தம் மலத்தில் தாமே புரண்டு திரியும் பன்றிகள் கூட மனிதனை விட உயர்ந்தது என நான் கருதுகிறேன்

போட்டி போடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருவதில்லை
பொதுவுடமை பேசும் அரசியல் கட்சிகள் குறிப்பிடுவதில்லை
அரசு மட்டும் கவனத்தில் வைக்கிறது? இவர்கள் இதற்காக தான் என்று
அவர்கள் மீது ஒரு கடுமையான காழ்புணர்ச்சி பார்வையாக மாறுகிறது.
அதற்கென ஒரு இனத்தையே உருவாக்கி அவர்களை தேசத்தின் கொடிய நோயான தீண்டாமையில் வாழ வைத்திருக்கிறார்கள் இந்த சமூக மலங்கள்

என்றாவது நீ தொட்டதுண்டா?
இல்லை வேண்டாம், அதை சிறிது நேரம் பார்க்க முடியுமா? 
அப்புறம் எப்படி அதற்கு ஒரு சமூகத்தை தேடுகிறார்கள்?
ரிசர்வேஷனு வாய்கிழிய பேசும் சாதிக் கட்சிகளின் இளைஞர்களே இந்த வேலைக்கு உங்களின் சாதிவிழுக்காடு அதிகரித்தால் வேலைக்கு சேர்வீர்களா?
இது தான் அரசியலமைப்புச் சட்டத்தின் வீரியமோ?
இதற்கு தான் தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படுகிறதோ?
உயிருக்கு ஆபத்தான ஒன்றை விருப்பம் இல்லாமல் தேசம் திணித்ததன் காரணமாக இயங்கும் இவர்களுக்கு உங்களின் உயர்ந்த விருதுகள் இணையாகுமா? 

மற்றவர்களை கைதட்டி வரவேற்க்கும் நாம் தான் இவர்களை மூக்கை மூடுக்கொண்டு அழைக்கிறோம்
மலங்களை விட மனிதர்கள் உயர்வதே இல்லை. இதை அள்ளுவதால் அவர்கள் தாழ்வதும் இல்லை

மலத்தின் கூடாரம் இவர்கள் என்றால் படைத்த இறை இவர்களின் மஞ்சளில் நீராடி படைத்த பாவத்தை போக்கிக்கொள்ளட்டும்

சாமான்யர்கள் குரல்

Partition of India: What impact did it have? - CBBC Newsround

சாமான்யர்கள் குரல்

அடுக்கடுக்காய் எத்தனையோ ஜவுளி கடைகள்
அதற்கு அருகிலேயே சாமான்யர்கள் தலையில் துனிமூட்டைகள்

அழகழகாய் ஆடம்பர பொருட்கள் பக்கத்திலே கையில் உறையும் கைவினைக் கலைகள்

பளபளப்பாய் பாத்திரங்கள் நிற்கும் தூரத்தில் ரோட்டு கடைகள்

செயற்கை மாடங்களில் செறிவூட்டப்பட்ட பழங்கள் சுவற்றை தாண்டி நிற்கும் சிவந்த கைகளின் அழகுகள்

இவையெல்லாம் எதையோ சொல்கிறது. அதை கவனிக்காத மனங்கள் பரிகாசம் செய்து செல்கிறது

தூரத்தில் ஒலிக்கும் தொலைபேசியை அடையாளம் காணும் நாம் தான் கூடவே இருக்கும் பலரை அடையாளம் காண மறுக்கிறோம்

இவர்கள பற்றி பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் பெருமை கொள்ள தகுதியான நபர்கள் இவர்கள் என்று நான் நம்புகிறேன்

அம்பானி நடைபோடும் அதே சாலையில் தான் இந்த சாமான்யர்கள் சலிக்காமல் உழைக்கிறார்கள் என்பதை நம்மால் மறுத்து விட முடியுமா? பாடங்களை பயிற்றுவிக்கும் ஒருவருக்கு தான் பயிற்சி பொருந்தும். ஆனால் அனுபவத்தை யார் வேண்டுமானாலும் கொடுக்க முடியும்

என்றோ ஒருநாள் நானும் அம்பானி ஆவேன் என்று தினமும் நினைத்துக் கொண்டு தன்னை உழைக்க வருத்திக் கொண்டு ஓடும் இவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை தான் என்னை இவர்களின் மீதான பார்வையை மாற்றியது

அந்த நம்பிக்கை பிழைப்பு மீதானது அல்ல. உழைப்பு மீதான பெரும் விருப்பம். அது தான் அவர்களை என்றுமே உயிரோட்டம் நிறைந்த புதியநீராக ஓடச்செய்கிறது

சாமான்யர்கள் குரல் ஒலிக்கிறது. அதை தடைசெய்வது பெரிய முதலீட்டு நிறுவனங்கள் அல்ல. அதை குரலாகவே எண்ணாத நடைபாதை மானிட பரிகாசம் தான்

குப்பைகளை வாங்குபவர்கள் பெருமையாகவும் போடுபவர்கள் கீழாகவும் பார்க்க நாம் என்றைக்கு கற்றுக் கொள்கிறோமே அன்றே அந்த குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும்

மதங்கள்

Religion in crisis


மதங்கள்

தேவை அளிப்பை நோக்கியது

ஆசைகளை உள்ளடக்கியது

ஆசைகள் திணறல்களின் தெளிவு 

தெளிவோ தீர்க்கமான சிந்தனை

சிந்தனையோ வாக்கின் இனிமை

வாக்கோ வளத்தின் அடையாளம்

அடையாளம் மனதின் எழுகை
எழுகை தூண்டுதலின் தொடக்கம்
இந்த தொடக்கம் தான் அடிப்படை
அடிப்படையே திரிந்த தேவையாக இருக்கிறது

அப்படியென்றால் எதுவும் இங்கு தனித்து இயங்கவில்லை. இது ஒ‌ட்டுமொ‌த்த கூட்டுமுயற்சி

முறன்களின் தொகுப்பாக இந்த இயற்கையே இருக்கையில் நடைமுறை முறன்கள் இயல்புதான்
இதை மறுக்கமுடியுமா? இன்று ஏதோ ஒரு வெற்றிடம் நம்மை சூழ்ந்து அதற்கான விலையாக நம்முடைய நேரத்தை கொடுக்கிறோமே அது தான் முறன்களாக மாறுகிறது

அடிப்படைக்கும் தேவைக்கும் வித்தியாசம் தெரியாத அனுகுமுறை தான் அவசரமாக அநீதியை ஆங்காங்கே நிகழ்த்துகிறது

ஏன்? நாம் புத்தனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் குறைந்தபட்ச மனிதத்தன்மையை வெளிப்படுத்த பயம் கொள்கிறோமே! எதற்காக?

சித்தாந்தங்கள் வாசித்த நம்முடைய மனுகுலம் மனித உரிமைகளை அடக்கி ஆளுகையில், அந்த சட்டத்தை உடைப்பதில் என்ன தவறு? முகத்திரையில் ஒளிந்து கொண்டு முற்போக்கு சிந்தனை என்கிற பெயரில் பழைய அனுகுமுறையை பிற்போக்காக கருத்தியல் ரீதியாக திணிப்பது எவ்வளவு பெரிய வஞ்ச மனப்பான்மை

இங்கு குற்றங்கள் பிறக்கப்படுவதில்லை
உருவாக்கப்படுகின்றன

இந்த சமூகத்தில் பெரும்பாலான உரிமைகள் வேண்டுமென்றே ஆழமாக புதைக்கப்படுகிறது

அதற்கு பின்னால் உள்ள அத்தனை பேரின் முகங்களின் உண்மையை அலசுவீர்களேயானால் அவர்கள் மத உணர்வோடு அலையும் வெறியர்கள்

மதங்கள் தவறுகளை ஒருபோதும் செய்வதில்லை
இந்த மதங்களை நிர்வகிக்கும் மத தலைவர்கள் மட்டுமே!

திருமணம்

Men want to marry younger women. Don't believe it if you are told ...


திருமணம்

திருமணம் கூட நம்பிக்கையின்மையின் அடையாளம் தான் என்று நான் நினைக்கிறேன். தமிழர்கள் திருமணம் என்ற வைபவத்தை கடைபிடித்தவர்கள் இல்லை. களவு வாழ்க்கையில் நுழைந்து பிறகு கற்பு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் நாம்!


என்று சந்தேகம் எழுந்ததோ அன்றே தாலி என்கிற முறைமை தேவைப்பட்டது. அகக் கோட்பாட்டின் சீர்கேடு திருமணம் என்கிற பெயரில் வந்ததாக கருதுவதில் தவறில்லை

நீதி காப்பியம் தோன்றியதற்கு கன்னகி காரணமாகவும் இருக்கலாம். ஆனால் கோவலனை சீர்செய்ய தவறிய பொறுப்பு கன்னகியைச் சேரும். அவள் தேரா மன்னா என்றதற்கு பதில் தோற்றா ஒழுக்கா என்று கோவலனை கேட்டிருந்தால் அவளின் வாழ்வு இன்புற்றிருக்கும்

இந்த தவறு சமூகத்தை சார்ந்த அறநெறி கொள்கைகளின் முறையின்மையின் வெளிப்பாடு

எல்லை நீத்த பிரபஞ்சத்தை ஒரே ஒரு சொல்லில் சுட முடிந்த சீதை ராமனுக்கு காத்திருக்க வேண்டியதன் அவசியம் அறிவேன். ஆனால் ராமனின் தவறுகள் வேடிக்கையாக பார்க்கப்படுவதும் ராவணனின் செயல் தூற்றப்படுவதும் சமூகத்தை ஒரு முறையாவது கேள்வி கேட்க தோன்றுகிறது

வாழ்வியல் பந்தங்களில் சார்பு நிலை சரியில்லாமல் போனதற்கு சீதையின் தவறு ஒரு மகச்சான்று

தொல்காப்பியம் கூட புறத்தை இருகூறுகள் கொண்டே சாடியதன் அர்த்தம் அகத்திற்கு கொடுத்த முன்னுரிமையை வெளிக்கொனர்கிறது

தன்னை இழந்த அகதி தன் உடையை இழக்க தகுதி வாய்ந்தவன் இல்லை, இருப்பினும் பந்தயப் பொருளாக த்ரௌபதியை வைத்தது உரிமை மீறல் தானே

அறம் வளர்த்த சபையில் தர்மம் ஸ்தாபிக்காமல் போனதற்கு திருமண பந்தங்கள் ஒழுங்காக வரையறை செய்யாமல் போனதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறதே

சபை மௌனத்தை ஆதரித்தது சத்திய வாக்குரைக்கும் உத்தமனின் வேதியரை நிற்கவைத்து கேள்வி அம்புகளை தொடுத்தது போல இருந்திருக்கும்.

புராணங்களை மத உணர்வோடு அனுகாமல் உளவியல் ரீதியாக அனுகுவது மிகவும் அவசியம் என்று நான் நம்புகிறேன். இவை அனைத்தும் நமக்கு நாமே புரிதலை ஏற்படுத்த காலத்தால் வடிவெடுத்த  வாசகங்கள்.

ஓடமும் ஒரு நாள் ஓடையில் ஓடும்
ஓடையும் ஒரு நாள் ஓடத்தில் ஓடும்

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யார்த்தன கரணம் என்ப

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

காம கடும்புனல் கூட்டமே

Malena – ICFFICFF


காம கடும்புனல் கூட்டமே

தனிமையில் உலவும் பொழுதும், ஆடையின்றி உறங்கும் பொழுதும், நடைபாதையில் அடியிடும் பொழுதும் உற்று நோக்கும் ஓராயிரம் அர்த்தங்கள் யாவும் நானில்லை!
உடலென்ற உலையில் எரிபொருள் நான். பிறந்த சர்ச்சைகளின் இறப்பு நான். சுதந்திர நாட்டின் அடிமை நான். என் உடலில் உள்ள மேடுகளும் பள்ளங்களும் இத்தனை கொடூரங்களை ஏற்படுத்த முடியுமோ?
நான் உடலால் விற்பனைக்கு உங்கள் பார்வைக்கு. சுமத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நான் என் கண்கள் கொண்டு பார்த்தால் இந்த சமூகத்தில் நடமாடும் அத்தனையும் குருட்டு பார்வையாளர்கள் மட்டுமே
சுதந்திர பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? விரைத்த ஆண்குறியின் ஆசைகள் எல்லாம் என் யோனியின் ஆழத்தில் இறக்கப்படுவதற்கோ?
காமத்தின் கூடாரம் உங்கள் அருவருக்கத்தக்க பார்வைகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நான் உடலால் விற்பனைக்கு என்றால் அதனை உற்பத்தி செய்த உங்கள் சமூக பார்வைகள் நான் விலைக்கு வாங்க தரமற்ற கேவலங்கள்
அட காம கடும்புனல் கூட்டமே!

நான் உடலால் விழுங்கப்படுகிறேன்
- இவள் மலீனா

நவீன தீண்டாமை

No photo description available.


நவீன தீண்டாமை

எனக்கான தேடலை நான் கூர்ந்து கவனித்து ஆழமாக பயணித்து அதில் முதிர்ச்சி அடையும் வரை போராடி போராடி இரத்தங்களை வியர்வையாக வெளியேற்றுகையில் எனக்கு சற்றும் பொருந்தாத பெருவாரியான சுமைகளை திட்டமிட்டு திணிப்பது தான் நுழைவுத் தேர்வின் அடிப்படை நோக்கமோ?
நவீன தீண்டாமையை இந்த இளைஞர் கூட்டம் எதிர்கொள்ளும் போது என் உடலில் குருதி இல்லாமல் போயிருக்கும். வளர்ந்துவரும் கல்வியறிவு இதை மறைமுகமாக கட்டாயமாக்குவது ஏற்புடையதாக இல்லை. ஒன்றை மட்டும் ஆழமாக நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். அது என்னவென்றால், எத்தனை சுமைகளை திட்டமிட்டு திணித்தாலும், நாங்கள் மீண்டும் மீண்டும் முளைப்போம்.
தீண்டாமை நுழைவுத் தேர்வுகளாக வடிவம் எடுக்கிறது. அரசு அதற்கு அடித்தளம் போடுகிறது. பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி வகுப்புகள் நடைபெறாமல் போவது போல், ஒருநாள் கல்வி ஏனென்று மாணவர்கள் பள்ளிகளை நோக்கி நடக்காமல் போக வாய்ப்பு உண்டு.
அரசியல் சமூக மாற்றமே ஒழிய, தனிநபர் சார்ந்த பெருமை சேர்க்கும் செயல் அல்ல. இறுதியாகவும் எச்சரிக்கை செய்கிறேன் மத்திய அரசு தமிழ்நாட்டில் பல நவீன தீண்டாமையை விதைக்கிறது.

பேராயுதம்

Cybercriminals face the sword of justice with new London court


பேராயுதம்

நான் கொண்ட மார்பும் யோனியும் தான் உன்னை தீண்டயது என்றால் இன்று முதல் அவற்றை தீண்டத்தகாத ஒன்றாக அறிவிக்கிறேன்
சுற்றமும் நட்பும் சூழும் என்று தானே உயிரோடு நடமாடினேன், ஆனால் என் உடம்பை சூறையாடுவீர்கள் என்பதை அறிகிலேன்
இனி பெண் என்று பிறப்பேனேயானால் வெறும் ஊண் தாங்கிய பிண்டமாகவே பிறப்பேன். இனியாவது இந்த காமம் அழியட்டும்

காமமே நீயும் ஆணுக்கு அடிமையாகி விட்டாயா?
இல்லை உன்னையும் ஆடையின்றி நடமாட வைத்தார்களா?
பரவாயில்லை விட்டுவிடு?
இவர்கள் தாயின் தாய்ப்பாலை கூட காமபானமாக பருகிய இழுக்குற்றோன்கள்
இனி ஆடைகள் எனக்கு தேவையில்லை, ஏனென்றால் நான் உடுத்தியிருந்தாலும் அவர்கள் கண்களுக்கு புலப்படவில்லை
உடைகள் மறைக்கத் தான் செய்தார்கள் என்று இன்று வரை நினைத்திருந்தேன்
ஆனால் இது தவறு, பெண்களின் உடல் வெளிச்சம் போட்டு காட்டவே நெய்தார்கள் போல
நான் போகும் வழியெங்கும் தீக்குச்சியாக ஒளிரும்கண் என்று நினைத்தேன் ஆனால் என் ஆடைகளை எரிக்கத் தான் கொண்டுவந்தாய் என்பதை மறந்துவிட்டேன்
மன்னியுங்கள்
நம்பிக்கை வைத்தது தவறு தான்
கற்பகிறகத்தில் பெண்களை அனுமதிக்க மாட்டார்கள்
காரணம் தெரியவில்லை, ஆனால் இன்று தெரிந்து கொண்டேன்
பாவம் கடவுளும் கற்பழிப்பு செய்யப்படுகிறாள், ஆதனால் தான் பெண்களை பாதுகாப்பு செய்ய வரவேண்டாம் என்று நினைத்தாளாம்
பாவம் அவளுக்கு தெரியவில்லை புறத்தில் கூட காமமே என்று
நான் தெரியாமல் கேட்கிறேன்
பெண் என்றாலே காமம் என்பது விதியா?
இன்னும் எத்தனை ஆசிஃபாக்களையும் நிர்பயாக்களையும் நான் பலிகொடுப்பேன்
பிஞ்சு முதல் பேதை வரை உடல் என்பது காமம் என்று தானே நினைக்கிறீர்கள்
அறிவீர்களா என் அடிவயிறு வலியின் ஆழத்தை?
வாழ்ந்து கொண்டே சாகவும் செத்துக் கொண்டே வாழவும் முடியுமானால் மாதவிடாய் பழகிப்பார்
புல்லறுக்கும் கலன் ஒன்று உயிர் அறுக்க துடிக்கும் துன்பம் சுகித்ததுண்டா?
இதற்கிடையில் உங்கள் காமம் களிப்புறுமா?

பெண் என்ற பேராயுதம் ஆண்களை களைய முற்பட்டால் இனி புவியில் புற்கள் கூட மிஞ்சாது
பாவம் அன்பு என்பது மட்டுமே அவளின் ஆணிவேரானதால் துன்பத்தை தர இயலவில்லை
ஏனென்றால் இவள் தாய்மையின் படைப்பள்ளவா!

😢

எங்கே இறைமை இருக்கிறது?

 No photo description available.

எங்கே இறைமை இருக்கிறது

எல்லைப்படுத்தப்பட்ட வரையறைக்குள் நின்றுவிட்டதோ இறைமை?

என் வீட்டிலோ அல்லது ஊரிலோ இருக்கக்கூடிய இறை நிகழ்த்தாத அதிசயத்தை ஏழுமலையானோ, மருதமலையானோ, மதுரை மீனாட்சியோ காசி விசுவநாதனோ நிகழ்த்துமாயின் இறைமை பற்றிய புரிதல் எங்கே வளர்ந்திருக்கிறது?
கடவுள் என்பதே பயணத்தை ஓட்டிய அனுபவம் தானே! அப்படியானால் என் வீட்டு பூஜை அறையில் உலவும் ஒன்றுதானே அங்கேயும் இருக்கிறது. முற்றத்தில் தங்கிய இறைக்கு இல்லாத பலம் மூல சன்னதியில் வீற்றிருக்கும் இறைக்கு வருவது எத்தகைய நவீனம்? இங்கே சக்தி வாய்ந்த கடவுள் என்பது எங்கிருந்து வந்தது?
இறைமை பற்றிய புரிதல் இன்னும் இங்கே விளங்கவில்லையோ! மனிதம் மதத்தை வளர்க்கிறது. மதம் மனிதர்களைப் பிரிக்கிறது.
ஆழமாக பார்த்தல், என் மீது தொடுக்கப்படும் ஒவ்வொரு வாழ்வியல் அம்புகளையும் தகர்த்திட எனக்கான உந்துசக்தியாக ஏதோ ஒன்று என்னை தள்ள வேண்டும். அது என் போன்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ண ஊடுருவல் வகுத்த சூத்திரம் தான் ஒருவேளை #இறைமை என நம்பப்படலாம்.
ஆனால், நம்பிக்கை இதன் மீது ஏற்றினால் மட்டுமே வாழ்க்கை வெளிச்சம் அடையும், வாழ்க்கை பிரகாசப்படும் என்கிற மனப்பான்மை தான் என்னை அச்சுறுத்துகிறது. ஏனென்றால் நான் அடைகிற கஷ்டங்களை என் மீது திணிக்கின்ற சமூக கட்டமைப்பு, என் முயற்சியால் கிடைத்த வெற்றியை இறைமை கொடுத்த வரம் என்று என்னிடமிருந்து அதை பறிக்கிறது.
இதென்ன கொடூரம்
யார் யார் மீது பழி போடுவது? யார் வெற்றியை யார் சுகிப்பது? எனக்கு இறை பற்றிய கவலை இல்லை. ஆனால் அது மட்டுமே இறைமை என்று பரப்புரை செய்கின்ற மதபோதகர்கள் பற்றிய பயம் நிறையவே உண்டு. இங்கே மதம் மறுசுழற்சி செய்ய ஆயத்தமாகும் போது, அதனை அடக்கி இறைமை இதுவென குரைக்கும் போது தான் இறைமை இல்லாமல் போயிருந்தால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் மேலெழும்புகிறது.
இறை பற்றிய நூதன கண்ணோட்டம் இங்கே என்னவெல்லாம் நிகழ்த்தியது என்பதற்கு எழுதப்பட்ட வரலாறு சான்றாக உள்ளது. ஆனால் இந்த நூதன கண்ணோட்டம் நிகழ்த்தும் சமூக அநீதிகளை வரலாற்றில் எழுதப்படாதது வேதனையை வெளிக்கொணர்ந்து விரக்தியில் வீழ்த்திவிடுகிறது.
இங்கு கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புனித கலவரம் மதமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. இழப்புகளை சந்தித்தவர்கள் இறை இல்லை என்கிறார்கள். ஏற்றங்களை கண்டவர்கள் இறையால் தான் நடந்தது என்கிறார்கள். இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்பவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறார்கள்.
எங்கே இறைமை இருக்கிறது!

நிறங்கள்

50 Shades of Skin Colour - KURIOUS 

#நிறங்கள்

வானவில்லின் பக்கத்தில் ஒரு மாட வீதி அமைத்திடுவோம் வா!
வண்ணங்கள் நிறைந்த சாலையில் கால்களை நனைத்திடுவோம் வா!
முகத்தோடு முகம் பூசி மனித நிறங்களை ஈடு செய்வோம் வா!
கைகளோடு கைகள் கோர்த்து கறைகளை கரைத்திடுவோம் வா!
சாம்பல் நிறமோ வெள்ளை பாலின் நிறமோ நிறமற்று சேர்வோம் வா!
ஆதி இனத்தில் ஒரு நிறம் வீழ்ந்தால் மீதி நிறத்தை காத்திடுவோம் வா!
நிறவெறி இல்லாத பிள்ளைகளை விதைத்திடுவோம் வா!
நிறங்களை காட்டி இனி கைவிரலை மையிடாமலிருப்போம் வா!
நிறங்கள் நம்மை பிரித்திடவில்லை
நிறவெறியால் தான் நாம் பிரிந்து விடுகிறோம்!
நிறங்கள் இயற்கைக்கு சொந்தம்
அதற்கு செயற்கை உருவம் கொடுக்காதீர்கள்!

ஒரேயொரு_நாள்_விடுமுறை

The mental load: Women reflect on the messy truth of being a mom 

#ஒரேயொரு_நாள்_விடுமுறை

தூங்கிப்போன அதிகாலை
துயிலுரிக்காத சூரிய ஒளி
துவண்டு போன வாசல்
துருப்பிடிக்கும் வெண்கல வாளி
கைத்தடி கிடைக்காத துடைப்பம்
பேச ஆளில்லா கிணற்றடி
உடை மாற்றாத சோப்புக்கட்டி
குளிக்காத நேற்றைய துணிமணிகள்
வானவில் காணத நுரைகள்
வறண்டோடிய கழிவு வாய்க்கால்
தீண்ட உடல் இல்லாத சாம்பல்
சிரிக்க மறந்த பாத்திரங்கள்
தேக்கமில்லா பேசின் குளம்
ஓய்வெடுக்கும் மின்மோட்டார்
மூச்சு விடும் அடைப்பு குழாய்
கதகதப்பு இல்லா அடுப்பு
கத்த மறந்த கொதிஉலை
கொலை செய்யாத சமையலறை கத்தி
கோபம் கொள்ளாத மிளகாய் தூள்
தண்டனையில் தப்பித்த கல்உப்பு
மேலாடை அணிந்த பால்
முட்டிக்கொள்ளாத இஞ்சி
உடைபடாத பிஸ்கட் துண்டு
காபி டீ சத்தம் இல்லாத நாள்
சக்கரம் உடைந்தார்போல் என் கால்கள்
வலிக்காத தசைகளில் நான்
சுழலாத கண்களில் நான்
ஓடாத கால்களில் நான்
மறுத்துப்போகாத யோனியில் நான்
கிடைத்திடாத இந்த நாளில் நான்!
மனைவி, அம்மா என தியாகி பட்டம் வேண்டாம்!
என்னை என்னிடமிருந்து பிரித்து வைக்காமல் இருங்கள் போதும்!
கொஞ்சம் நான் நானாக வாழ்ந்து விட்டு போகிறேன்!

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...