ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

எங்கே இறைமை இருக்கிறது?

 No photo description available.

எங்கே இறைமை இருக்கிறது

எல்லைப்படுத்தப்பட்ட வரையறைக்குள் நின்றுவிட்டதோ இறைமை?

என் வீட்டிலோ அல்லது ஊரிலோ இருக்கக்கூடிய இறை நிகழ்த்தாத அதிசயத்தை ஏழுமலையானோ, மருதமலையானோ, மதுரை மீனாட்சியோ காசி விசுவநாதனோ நிகழ்த்துமாயின் இறைமை பற்றிய புரிதல் எங்கே வளர்ந்திருக்கிறது?
கடவுள் என்பதே பயணத்தை ஓட்டிய அனுபவம் தானே! அப்படியானால் என் வீட்டு பூஜை அறையில் உலவும் ஒன்றுதானே அங்கேயும் இருக்கிறது. முற்றத்தில் தங்கிய இறைக்கு இல்லாத பலம் மூல சன்னதியில் வீற்றிருக்கும் இறைக்கு வருவது எத்தகைய நவீனம்? இங்கே சக்தி வாய்ந்த கடவுள் என்பது எங்கிருந்து வந்தது?
இறைமை பற்றிய புரிதல் இன்னும் இங்கே விளங்கவில்லையோ! மனிதம் மதத்தை வளர்க்கிறது. மதம் மனிதர்களைப் பிரிக்கிறது.
ஆழமாக பார்த்தல், என் மீது தொடுக்கப்படும் ஒவ்வொரு வாழ்வியல் அம்புகளையும் தகர்த்திட எனக்கான உந்துசக்தியாக ஏதோ ஒன்று என்னை தள்ள வேண்டும். அது என் போன்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ண ஊடுருவல் வகுத்த சூத்திரம் தான் ஒருவேளை #இறைமை என நம்பப்படலாம்.
ஆனால், நம்பிக்கை இதன் மீது ஏற்றினால் மட்டுமே வாழ்க்கை வெளிச்சம் அடையும், வாழ்க்கை பிரகாசப்படும் என்கிற மனப்பான்மை தான் என்னை அச்சுறுத்துகிறது. ஏனென்றால் நான் அடைகிற கஷ்டங்களை என் மீது திணிக்கின்ற சமூக கட்டமைப்பு, என் முயற்சியால் கிடைத்த வெற்றியை இறைமை கொடுத்த வரம் என்று என்னிடமிருந்து அதை பறிக்கிறது.
இதென்ன கொடூரம்
யார் யார் மீது பழி போடுவது? யார் வெற்றியை யார் சுகிப்பது? எனக்கு இறை பற்றிய கவலை இல்லை. ஆனால் அது மட்டுமே இறைமை என்று பரப்புரை செய்கின்ற மதபோதகர்கள் பற்றிய பயம் நிறையவே உண்டு. இங்கே மதம் மறுசுழற்சி செய்ய ஆயத்தமாகும் போது, அதனை அடக்கி இறைமை இதுவென குரைக்கும் போது தான் இறைமை இல்லாமல் போயிருந்தால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் மேலெழும்புகிறது.
இறை பற்றிய நூதன கண்ணோட்டம் இங்கே என்னவெல்லாம் நிகழ்த்தியது என்பதற்கு எழுதப்பட்ட வரலாறு சான்றாக உள்ளது. ஆனால் இந்த நூதன கண்ணோட்டம் நிகழ்த்தும் சமூக அநீதிகளை வரலாற்றில் எழுதப்படாதது வேதனையை வெளிக்கொணர்ந்து விரக்தியில் வீழ்த்திவிடுகிறது.
இங்கு கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புனித கலவரம் மதமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. இழப்புகளை சந்தித்தவர்கள் இறை இல்லை என்கிறார்கள். ஏற்றங்களை கண்டவர்கள் இறையால் தான் நடந்தது என்கிறார்கள். இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்பவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறார்கள்.
எங்கே இறைமை இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...