வியாழன், 10 செப்டம்பர், 2020

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம்

வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் ''தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல.

நூல்கள் காலத்தை ஒட்டியது. காலத்தின் நோக்கத்தை அடைய கவிதைகளை உயர்த்த வேண்டிய தேவை உள்ளதால் கருத்தும் அதைச் சார்ந்த முரண்களும் விவாதிக்கப்படாமல் இருக்கிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்ட சமூக அமைப்பு, எத்தகைய சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்தியா மிகச் சரியாக முன்னுதாரணம்.
தமிழ்தேசியம் பேசும் நாட்டில் சமூக சிக்கல்கள் சின்னங்களாக உருவெடுக்கிறது. நாளடைவில் அதுவே பழக்க வழக்கங்களை முன்வைத்து கலாச்சார மையமாக வழியமைத்து நாகரீகமாக பழிவாங்குகிறது.
வள்ளலாரின் கூற்றுக்களை ஒருவேளை ஏற்றுக் கொண்டிருந்தால் பெரியாரின் பகுத்தறிவு ரீதியான கொள்கைகளுக்கு தமிழகத்தில் வேலையே இல்லை!
சமூக பார்வையில் இருந்து எறியப்படும் ஒவ்வொரு பார்வையும் எங்கேயோ ஒரு பெரியாரை, வள்ளலாரை, தீரனை தோற்றுவிப்பதில் தவறேதும் இல்லையே. மதம் முழுக்க முழுக்க ஒரு கட்டமைப்பின் மூலம். அதற்கு முரணாக எழும் பகுத்தறிவு மத மூடநம்பிக்கைகளை களைவதில் என்ன தவறு இருக்கிறது?
மதம் என்பது சீரமைப்போ சிக்கலோ? மனித சங்கிலியின் தேடல் மேலோங்குவதை இரண்டும் வெவ்வேறு கோணங்களில் புனரமைத்தால் நன்று.

கம்ப உளவியல்

கம்ப உளவியல்

நாம் உறவுகளில் நம்மை முழுமையாக திளைக்கும் பொழுதுகளில், நன்மை, தீமை மற்றும் சூழ்ச்சி போன்றவற்றால் மூழ்கடித்து உண்மையை பறைசாற்ற முடியாமல் திணறுகிறோம். நான் அதிகளவில் கேட்டு படித்த இதிகாசங்களில் வரலாற்றுப் பெருமை மிகுந்த கம்பராமாயணம், மகாபாரதம் மற்றும் சிலப்பதிகாரம் என்னை ஒரு திறவுகோல் போல மாற்றியது. அதிலும் குறிப்பாக உளவியல் ரீதியாக பல முகங்களின் பன்முகத்தன்மையை நான் அலசி ஆராய இவை எனக்கு பெரிதும் உதவுகின்றன.

நாம் மட்டுமல்ல, அனேக ஜீவராசிகளும் தாயின் மீது அதீத பாசம் கொண்ட பக்தர்கள் என்பதை அறிவோம். தாய் என்பவள், உயிர்ப்புடன் நம்மை உயிர்வித்த சிரம் மட்டுமல்லாமல் அவள் நம்முடைய ப்ராணமாகவும் மாறியவள். ஆனால் கம்பனை படிக்கையில், கைகேயி செய்த தவறினால் அவளின் தாய்மையை அலச நான் முற்ப்பட்டேன். இந்த ஏகாந்த எண்ணம் எழுந்த நிலையில், இது சரியா தவறா என்று நான் யோசனையின் நீட்சியில் கிடந்த வேளைகளில், கம்பனே அதற்கான உபாயத்தை நல்கினான்.
கைகேயி, ராணியாகவே பிறந்து, வளர்ந்து, பிறகு நாடாலும் மன்னனின் துணையாக இருக்க வாய்ப்பு பெற்றவள். ஆனால் அவளுக்கு அதுவே பெரிய தலைக்கணமாக மாறி, ராஜ்ஜியத்தை பற்றி கடைசி வரை தன் ராணி அந்தஸ்தை பெற திட்டம் வகுத்து மேடையேற்றினாள். கைகேயி புதல்வன் பரதன், கோசலையின் புத்திரன் ராமன். ராமன் முதல் புதல்வன் என்பதாலும் அவன் பவித்திர சூத்ரதாதி என்பதாலும் அவனே முதலில் நாடாளுவான் என்பதை அறிந்து கொண்டு அவனை வேஷமிட்டு பாசத்துடன் வளர்த்தாள்.
ஒரு நாள் அரண்மனையில் ராஜ்ய உரிமை சண்டையாக உருவெடுக்கவே, கைகேயி மிகு‌ந்த கவலை உற்றாள். இதற்கு காரணம் ராணி என்கிற பெருமை பறிபோகுமோ என்றதால் தான். ஒருவேளை ராமன் அரசனாக மகுடம் சூடினால், கோசலையின் மீது மட்டுமே அதிகபட்சமாக கவனமும் மரியாதையையும் இருக்கும் என்பதை மந்த்தரை, அதாவது கூனி கலகமூட்டவே வெகுண்டெழுந்து கலகத்தை பெரிதாக மாற்றினாள். அதனால் ராமன் வனவாசம் செய்ய முடிவானதும் பரதனே நாடாள மன்னன் ஒப்புக் கொண்டார்.
ராமன் வனவாசம் செய்ய புறப்பட்டான். ஆனால் இங்கு தான் தாய்மையின் தன்மையை கம்பன் அழுத்தமாக நிறுவுகிறான். செய்தி அறிந்து அரண்மனை சேர்ந்த பரதன், தன் தாயிடம் கேட்டான். அவளோ, அதற்கு தகுந்தபடி பதில் சொல்லி சமாளிக்க முடியாமல் கோபம் கொண்டு வார்த்தைகளை விட ஆரம்பித்தாள்.
பரதா, நான் ராமனை நாடாளவிடாமல் உன்னை ராஜாவாக நிலைநாட்ட எண்ணம் கொண்டு அதை இன்று முடித்து விட்டேன் என்றாள். பரதனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட அவள் உனக்காக நான் செய்ய சூழ்ச்சியை நினைத்து பாராட்டாமல் இப்படி கோபத்தில் குதிக்கிறாயே என்று கேட்கையில்
கீண்டிலன் வாய் அதுகேட்டும் நின்ற நான்
என்று கூறவே கைகேயி அதிர்ந்து போனாள். அதாவது நீங்கள் இவ்வளவு பெரிய சூழ்ச்சியை செய்ததாக கூறும்போது, கூறிய உங்கள் வாயை கிழிக்காமல் நிற்கிறேனே ஏன் தெரியுமா, என் அண்ணன் ராமன் கோபித்து கொள்வார் என்பதால் தான். நீ தாயல்ல பேய் என்று சபித்துக் சென்றான்.
இங்கே என்ன செய்தியை கூற வருகிறேன் என்றால், தவறு செய்யும் மனிதர்களை தண்டனை கொள்வது தான் தர்மமும் கூட. ஆனால் காப்பிய நோக்கத்திற்காகவும் தாய்மையின் தன்மையை இகழந்திட கூடாது என்பதாலும் கம்பன் இப்படி எழுதியுள்ளான் என்று நினைக்கிறேன்.
தவறு கண்டிக்கத்தக்கது. அது தாயாகவே இருந்தாலும் சரி. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே கம்பனுக்கு இலக்கியம் தந்த எழுதுகோல். ஆனால் கம்பனும் தாய்மையின் படைப்பள்ளவா. அதனால் தான் அவன் தண்டனையை எதிர்த்து குற்ற உணர்ச்சியை கைகேயிக்கு விளைவித்தான்.
வாழ்வியல் இலக்கணத்திற்காக எழுத்தானியுடன் நான்

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

இரக்கமில்லா இந்திய அரசியல்

இரக்கமில்லா இந்திய அரசியல்

இங்கே இறை காப்பாற்றும் என நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் தள்ளாடும் ஒவ்வொரு பிரஜையின் மிகச்சிறிய ஆசை, வீடு போய் சேரமுடியாதா என்பது தான்.
அரசின் கொள்கையில் நீதிமன்றங்களுக்கு வேலையில்லை என தீர்ப்பெழுதும் நடுநிலை தராசில் முள் இல்லாதது வழக்கத்திற்கு மாறானதாக எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தை பிடுங்குவதால் மேம்படும் என்பது பழக்கப்பட்ட ஒன்றானாலும் 20 லட்சம் கோடியில் உருவாக்கப்படும் உயர்தர துணுக்குகள் வேதனையான உண்மை.
எனக்கு அரசின் கொள்கையில் எதிலும் உடன்பாடு இல்லை என்றாலும் சிலவற்றில் அழுத்தமாக உண்டு.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் மீதான கடுமையான அக்கரை உள்நாட்டு மக்களின் மீது இல்லாததின் பின்னால் உள்ள அரசியல் நோக்கத்தை பாராட்டியாக வேண்டும்.
மது பிரியர்களை கொண்டாடும் மாநிலங்களில் மனித உயிர்கள் பற்றிய கவலைகள் சிறிதும் இல்லாமல் அமல்படுத்தப்படும் உயர்ந்த அவசர சட்டங்களை மனதார பாராட்டிட வேண்டும்.
இதைவிட இன்னொரு அபூர்வமான செய்தி என்னவென்றால், கோடிக்கணக்கான மக்களின் கூந்தல் பராமரிப்பு. மக்களின் கூந்தலை பராமரிக்க செலவழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கொண்டைக் கடலை மதிப்பு மிக்க இந்திய வருவாய்கள் தான்.
கஞ்சிக்கு வழியில்லாமல் மக்கள் போராடும் போதும் அவர்களின் தொழில்களை மேம்படுத்த கொடுக்கப்பட்ட பல்லாயிரம் கோடி கடன்கள்.
நிதி அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட தொகுப்பேடுகள் பொருளாதார முன்னேற்றத்தை வேகமாக வெளிப்படுத்தினாலும், அரசின் அவசர கால நடவடிக்கைகள் மக்களின் கடைசி ரூபாயை கூட சுரண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ரூபாயைக் கூட ஈட்டாத திறமைமிக்க அரசு மக்களிடம் பிச்சை கேட்பது இனி வரப்போகும் அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகாரப்பூர்வமாக அரசியல் சாசனத்தில் இணைக்கப்படும் என்பது தான் எதிர்கால இந்தியா. டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா அப்புறம் இன்னும் வரப்போகும் எல்லா கூந்தல் இந்தியா திட்டங்கள் தான்.
திட்டமிடுதலை திறமையாக செய்யும் பாரத பிரதமருக்கு என் கூந்தல் வாழ்த்துக்கள். வரப்போகும் அடுத்த ஐந்தாண்டுகளில் மக்களை விட்டு இந்தியா வேளியேறும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இருக்கட்டும். இந்தியாவின் நீதிமன்றங்களில் தீர்ப்பு எழுதப்படுவது மைகளினால் அல்ல. எப்போதோ இறந்த பேனாவில் ஊற்றப்பட்டிருக்கும் இரக்கமில்லா அரசியல் மட்டுமே.

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

நடுநிசி இரவினில்

நடுநிசி இரவினில்


எப்படியும் இந்த நாளில் கடந்து விடும் உன் நினைவுகள்,
என்னை கடத்திச் செல்லாமல் தாமதிக்க காரணம் என்னவோ?
நடுநிசி இரவினில் என்னோடு சேர்ந்து நீ தேடிய தேடல்கள் தீர்ந்துபோனதாலா?
அதெப்படி முடியும் வரை ஆறாத தீயில் நோயாக விழுந்த நீ, 
முடிந்த பிறகு நோயாக இருந்து ஆறாமல் வலி தருகிறாய்?
தீயவை யாவினும் சிறந்த தீயை நீ தீர்த்திட செய்து என்னை இப்படி அத்தீயிலே எரிக்கச் செய்வது தான் காதலா?
கள்வனே! 
நடுநிசி இரவினில் நானும் இங்கே கண்ணீர் தீ கண்ணீர் தீ மூட்டி குளிர்காய!
ஏனோ எட்டிப் பார்க்கும் உன் நாபகங்கள் எல்லாம் என் உடலின் வழியே இன்பம் தேடிய வயதே! 

நோயாக இருந்து ஆறாமல் வலி தருகிறாய்

😢

மலர்வளையம்

3 Tips On Breaking Up With Someone You Still Love | BetterHelp

மலர்வளையம்

நீ எனக்கான உறவு இல்லை என ஒவ்வொரு முறையும் உணர்த்தும் போது,
என் நெஞ்சே என்னைக் கடந்து போகிறது

அன்பை நீ உதறிச் செல்ல காரணமாக நான் இருக்கிறேன் என்று நினைத்தால் எனக்கே என் மீது அருவருப்பாக தோன்றுகிறது

இந்த நாள் இதை விட பெரிய இழப்பை எனக்கு அளித்திட முடியாது என்று நான் நினைத்தேன்

உண்மையில் இந்த நாளினும் இனிய நாளை நான் பெற்றிருக்க வாய்பில்லை என்று உன்னை கடந்த பின்பு தான் தெரிந்தேன்

உன் மார்போடு உறவாடிய இரவுகளில் என் மனதோடு பிசுபிசுத்துப் போன நம் காதலுக்கு தெரியாது அது அழுகிய ஆசையின் அர்த்தமற்ற அபத்தமென்று.

இந்நாளில் தெரிந்த உண்மை அந்நாளில் அறிந்திருந்தால் நான் இன்று விலைமதிக்க முடியாத கண்ணீரை உனக்காக சிந்தியிருக்க மாட்டேன்

நான் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரும் வீணென்று என் கண்கள் காய்ந்த போது தான் அறிந்தேன்

பரவாயில்லை,
அன்பு மிகவும் மென்மையானது.
அதை உன் கரடுமுரடான இதயத்தில் வைத்தது என்னுடைய தவறு தான்

நிச்சயம் இதை நீ படிப்பாய்.
அப்போதேனும் தெரிந்துக்கொள்.
நீ என்னை பிரிந்த நொடிகளுக்கு ஒரு நொடி முன்பு நான் உன் காதலுக்கு மலர்வளையம் வைத்திருப்பேன் என்று 🤷🏻‍♂

என்ன வரையறை இது

Period Pain Treatment


என்ன வரையறை இது

இது என்ன வரையறை இது என் உரிமை

எளிதில் கடந்து விடக் கூடிய வலி இல்லை இது. ஆனால் அந்த வலிகளை விட நடமாடும் அது குறித்த வரையறைகள் தான் அதிகம் வலிகளை உண்டாக்கும்

ஊரறிந்து உணவிட்டு பலநாட்கள் பொத்தி பொத்தி வைத்த கலனொன்று திடிரென கழன்று விழுகையில் யாதொன்றும் அறியாமல் தான் நின்றேன்

பிறந்த வலியினும் கொடிய வலி இதை யாருமே அறியாத போது தான் ஏற்படுகிறது. அறியாமை கூட அறிந்திட வாய்ப்பு உள்ளது. அதை அறிமுகப்படுத்திய எவரும் அறிகிலை. தவறு என்னுடையதா? விழுந்து சரிந்து பின் எழுந்து நிமிர்ந்தது அன்றொரு நாள் மட்டுமே

பிறகு, நிமிர்ந்தபொழுது திமிரென்றும் நடந்தபோது கர்வமென்றும் ஓடினபோது தலைக்கணமென்றும் வசைபாடிய மானிடர்களின் வாயில் நான் அபத்தமாக நிற்கிறேன்

பருவ வயதில் பாழாப்போன பரீட்சையமற்ற பாசவார்த்தைகள்.
பழகிய பிறகு பருவத்தில் விளைத்திடும் பசிவார்த்தைகள்.
விழுந்துவிட்ட நேரத்தில் சரிந்துப்போனது சாம்பலொன்று.
எழுந்தபோது எட்டிப்பார்த்த மழையாய் கலைந்தது. 
கலகலத்துப் போன என் கண்கள் ஏனோ கருக ஆரம்பித்தது.
கலையாடிய கைகள் கட்டப்பட்ட சருகாய் ஒடிந்தது.
நடைசூடிய கால்கள் மெல்ல இறங்கியது

இடுப்புக்கிடையில் ஒரு அழுத்தமான நம்பிக்கை. அலாதிய வலிகளின் உல்லாச ஓசை. பின்வாங்கும் பெருமூச்சு. பிதற்றிக் கொண்ட தொடைகள். பிணைக்கைதியாய் மற்றவர்கள் பார்வை

ஒளிந்து ஒளிந்து ஓடுகையில் ஓட்டம் கூட அடம் பிடித்த நிமிடங்களில் நான் அனுபவித்த வலிகளை அகற்ற கூட ஆட்கள் இல்லை. ஆமாம் ஆட்கள் இருந்தும் இல்லை

நின்ற இடம் ஒரு புனிதமான இடமாம். அதனால் தீட்டு பரவி திருத்தம் செய்திடுமாம், பாவம் அவர்களுக்கு புரியவில்லை, அங்கும் அந்த வலிகளை தாங்க முடியாமல் கல்லான கடவுளை

போதும். இது தீட்டென உணர்ந்தால் படைத்த அவன் இதில் பாவத்தை கழுவிக்கொள்ளட்டும்

மாதவிடாயே!
நீ என்ன செய்தாய், பாவம் நீ.
உன் வலிகளை விட இவர்களின் வரையறைகள் எனக்கு வலிக்கிறது! 😢

எங்கே கலாச்சாரம்

Embracing Gender Equality Through Social Entrepreneurship


எங்கே கலாச்சாரம்

அப்பழுக்கற்ற பவித்ரதத்தை போல ஊளையிடும் உயர்ந்த குடி மக்களே! காதலுக்கு கண்ணில்லை என்று சொன்னதே நீங்கள் தான். அப்புறம் எங்கே கலாச்சாரம் கறைபடிந்தது? எதை நீங்கள் கலாச்சாரம் என்று கருதுகிறீர்கள்? சிந்துசமவெளி நாகரீகத்தை மேம்படுத்த தான் நீங்கள் உழைக்கின்றீர்களா? மெசபடோமியாவின் பழக்கவழக்கங்களை பாதுகாக்க தான் பிறந்தீர்களா? லெமூரியாவின் பண்பாட்டை பண்படுத்த தான் படையெடுக்கிறீர்களா?

பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் கலாச்சாரம் என்ற தார்ப்பறியத்தை அறியாமல் அதெப்படி கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்கிறீர்கள் கலாச்சாரம் சீரழிகிறது என்று? மனித கழிவுகளை அகற்ற மனிதனை தேடும் நீங்கள் கலாசார காப்பகங்கள்?. கலப்படங்களை கலக்கம் இல்லாமல் சேர்க்கும் நீங்கள் பாதுகாவலர்கள்?. மனதில் மதிலிட்டு வீடுகளை தனிமைப்படுத்தி வீழும் நீங்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சீர்குலைக்க வந்த சீர்கேடுகள்.

உங்களைப் பார்த்து சிரிப்பதை சகித்துக் கொள்ளாத நீங்கள் தான், சகிப்புத்தன்மை பற்றி மேடைபோட்டு வாய்கிழிய பேசுகிறீர்கள். உங்கள் பேச்சைக் கேட்டால் எனக்கு அருவருக்கத்தான் செய்கிறது. இதென்ன தேசம்? உங்கள் வரையறைகளை தாண்டிய வரலாற்றில் காணப்போன பக்கங்களில் நீங்கள் கூறும் அத்தனையும் உள்ளது. அப்படி மருவிய ஒன்றைத் தான் நீங்கள் காலங்காலமாக கொண்டாடும் யாவும்

அதெப்படி மொழிகளை கடந்து வந்த நீங்கள், இனத்தின் அடையாளம் இதுவல்ல என்று உரிமையுடன் வழக்காடுகிறீர்கள். கலாச்சாரமே உனக்காவது தெரியுமா இவர்கள் யாரென்று. பண்பாடே நீ உணர்ந்தாயா இவர்கள் பழக்கவழக்கங்கள் யாவென்று. நாகரீகமே நீயாவது சொல் இவர்களின் நவநாகரிக நரித்தனத்தை? மகரந்தச் சேர்க்கை தனிப்பட்ட உரிமை. அது பிறப்புரிமை. அதுவே தனிமனித சுதந்திரம்

பழக்கவழக்கங்களை பண்பாடாக மாற்றி அதை கலாச்சாரமாக முன்னெடுத்து பின்னாளில் நாகரீகமாக வளர்ந்த எதையும் நீங்கள் அழித்துவிட முடியாது. உங்களுக்கு நடந்தால் உறவு, மற்றவர்களுக்கு நடந்தால் காமமா. அழுக்குகள் கூட உங்களை கண்டால் அருவருக்கும், ஒருவேளை உங்கள் அனுமானங்களை காதுகொடுத்து கேட்டால்.

உங்கள் தகாத உறவுகள் அர்த்தப்படும் என்றால், என் உறவு அரத்தப்படாதா? உடலின் தேவையை குறிவைத்த உங்கள் உறவுகளை விட உயிரோட்டம் நிறைந்த என் காதல் ஒன்றும் இளைத்ததில்லை. படைத்த இறை பாலினம் யாதென தெரியாத நீங்கள் பாலின சமத்துவம் பற்றி பேசாமல் இருப்பது தான் நல்லது.

நவநாகரிக கலாச்சார சீர்திருத்தவாதிகளே நான் உரைப்பது கேட்டீறோ!

இது தான் பாலினமா?

To achieve gender equality, we must first tackle our unconscious ...


இது தான் பாலினமா?

குறியீடுகள் இனப்பெருக்கத்தின் தார்ப்பறியம் என்றால், தேவையை நிறைவு செய்த பிறகு இனப்பெருக்கத்தை நிறுத்த வேண்டுமே


ஆனால் அதற்கு பின்னும் நடைபெறும் கூடல்கள், தேவைக்காக தான் நடக்கிறதா இல்லை இன்னும் தேவை இருக்கிறது என்று நடக்கிறதா.
உறவு என்று சொல்லி அசிங்கமான வார்த்தைகளை கொட்டாதீர்கள்

எதற்காக கூடல்கள் நடக்கிறது என்பதை அறியவில்லை.
எது உறவு என்பதை கூட அறியவில்லை.
உபதேசம் உரைக்க ஊருக்கு பத்து பேர் பைத்தியமாக சுற்றுகிறார்கள்.
பாலினங்களை படைத்த இறை பாலினம் யாதென அறிவீர்களா

அதற்கு குறியீடுகள் உண்டென வழிபடுபவர்கள்,
உண்மையில் அப்படி தான் இறை இருக்க முடியும் என்று கூற முடியுமா?

எதை முன்னிறுத்தி, உடலுறவுகள் நடைபெறுகிறது.
இது பாலின சமத்துவமா இல்லை பாலின கலாச்சாரமா. 
தன்னை முன்னிலை படுத்த நடக்கும் வேட்டையா.
வேடிக்கை மனிதர்கள் விவரம் அறிவார்களா 
இல்லை விவகாரம் விளைக்கிறார்களா

உண்மை யாதென இறைக்கு தெரியுமோ. ஒட்டிக் கொண்ட சதைகள் பாலுணர்வை தூண்டுகிறது என்றால், உணர்வுகளை குறியீடுகள் நிர்ணயம் செய்கிறதா இல்லை உணர்வுகளை வெளிப்படுத்த குறியீடுகள் உள்ளனவா

அர்த்தங்கள் அறிந்திட தகவல்கள் உள்ளனவா
அறிந்திட்ட பிறகு அதன் பின்னனி புலப்படுமா

உணர்வுகளை உள்ளடக்கிய ஊண் கொண்ட பிண்டம், எத்தனை பிரிவினையை நிகழ்த்துகிறது. அதற்காக அலைந்திடும் இந்த காம கடும்புனல் கூட்டம் கருதிடா உணர்வுகளை காமத்தின் நிலைப்பாடு என நினைக்கும் புரிதல் முறையானதா. 

இச்சைக்கு பிச்சையாகும் இந்த கூட்டம் எதைத்தான் அறிந்து வைத்திருக்கும்?

அட காமமே,
படுத்த படுக்கை களைவதற்குள் உன்மேல் விழும் அத்தனை குற்றச்சாட்டும் உன்னை மையப்படுத்தி நடக்கிறதென இந்த கூட்டம் முறையிடும் அவலத்தை நீ யாரிடம் முறையிடுவது என புலம்புவதற்கு நான் அடியெடுத்து கொடுக்கிறேனா

முன்னுதாரணமாக இருக்கும் இவர்கள் உன்னை முன்னுக்குப் பின் முரணாக குறைகூற நீ காரணமா.
கடவுளுக்கும் அடையாளம் தெரியாத இனம், கழுதைக்கு கால்கள் மூன்றென சொன்னால் நான் நம்புவேனா?

மஞ்சளில் இறை

In broad daylight, manual scavengers dip deep into sewage-filled ...


மஞ்சளில் இறை

அருவருக்கத்தான் செய்கிறது?

நம்மை போன்ற உயர்ந்த மனம் கொண்டவர்களை கண்டால் அருவருக்கத்தான் தான் செய்கிறது

இதென்ன தேசம்?
தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த 5000 கோடியில் செலவு செய்து அதிவேக இணைய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி என்னத்த சாதிக்க போறீங்க?

இது தான் தொழில்நுட்பமா?
இதற்கு தான் படித்து பட்டம் பெற்ற விஞ்ஞானிகளா? 
சௌசம் இல்லாமல் சிறுநீர் பெய்து தம் மலத்தில் தாமே புரண்டு திரியும் பன்றிகள் கூட மனிதனை விட உயர்ந்தது என நான் கருதுகிறேன்

போட்டி போடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருவதில்லை
பொதுவுடமை பேசும் அரசியல் கட்சிகள் குறிப்பிடுவதில்லை
அரசு மட்டும் கவனத்தில் வைக்கிறது? இவர்கள் இதற்காக தான் என்று
அவர்கள் மீது ஒரு கடுமையான காழ்புணர்ச்சி பார்வையாக மாறுகிறது.
அதற்கென ஒரு இனத்தையே உருவாக்கி அவர்களை தேசத்தின் கொடிய நோயான தீண்டாமையில் வாழ வைத்திருக்கிறார்கள் இந்த சமூக மலங்கள்

என்றாவது நீ தொட்டதுண்டா?
இல்லை வேண்டாம், அதை சிறிது நேரம் பார்க்க முடியுமா? 
அப்புறம் எப்படி அதற்கு ஒரு சமூகத்தை தேடுகிறார்கள்?
ரிசர்வேஷனு வாய்கிழிய பேசும் சாதிக் கட்சிகளின் இளைஞர்களே இந்த வேலைக்கு உங்களின் சாதிவிழுக்காடு அதிகரித்தால் வேலைக்கு சேர்வீர்களா?
இது தான் அரசியலமைப்புச் சட்டத்தின் வீரியமோ?
இதற்கு தான் தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படுகிறதோ?
உயிருக்கு ஆபத்தான ஒன்றை விருப்பம் இல்லாமல் தேசம் திணித்ததன் காரணமாக இயங்கும் இவர்களுக்கு உங்களின் உயர்ந்த விருதுகள் இணையாகுமா? 

மற்றவர்களை கைதட்டி வரவேற்க்கும் நாம் தான் இவர்களை மூக்கை மூடுக்கொண்டு அழைக்கிறோம்
மலங்களை விட மனிதர்கள் உயர்வதே இல்லை. இதை அள்ளுவதால் அவர்கள் தாழ்வதும் இல்லை

மலத்தின் கூடாரம் இவர்கள் என்றால் படைத்த இறை இவர்களின் மஞ்சளில் நீராடி படைத்த பாவத்தை போக்கிக்கொள்ளட்டும்

சாமான்யர்கள் குரல்

Partition of India: What impact did it have? - CBBC Newsround

சாமான்யர்கள் குரல்

அடுக்கடுக்காய் எத்தனையோ ஜவுளி கடைகள்
அதற்கு அருகிலேயே சாமான்யர்கள் தலையில் துனிமூட்டைகள்

அழகழகாய் ஆடம்பர பொருட்கள் பக்கத்திலே கையில் உறையும் கைவினைக் கலைகள்

பளபளப்பாய் பாத்திரங்கள் நிற்கும் தூரத்தில் ரோட்டு கடைகள்

செயற்கை மாடங்களில் செறிவூட்டப்பட்ட பழங்கள் சுவற்றை தாண்டி நிற்கும் சிவந்த கைகளின் அழகுகள்

இவையெல்லாம் எதையோ சொல்கிறது. அதை கவனிக்காத மனங்கள் பரிகாசம் செய்து செல்கிறது

தூரத்தில் ஒலிக்கும் தொலைபேசியை அடையாளம் காணும் நாம் தான் கூடவே இருக்கும் பலரை அடையாளம் காண மறுக்கிறோம்

இவர்கள பற்றி பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் பெருமை கொள்ள தகுதியான நபர்கள் இவர்கள் என்று நான் நம்புகிறேன்

அம்பானி நடைபோடும் அதே சாலையில் தான் இந்த சாமான்யர்கள் சலிக்காமல் உழைக்கிறார்கள் என்பதை நம்மால் மறுத்து விட முடியுமா? பாடங்களை பயிற்றுவிக்கும் ஒருவருக்கு தான் பயிற்சி பொருந்தும். ஆனால் அனுபவத்தை யார் வேண்டுமானாலும் கொடுக்க முடியும்

என்றோ ஒருநாள் நானும் அம்பானி ஆவேன் என்று தினமும் நினைத்துக் கொண்டு தன்னை உழைக்க வருத்திக் கொண்டு ஓடும் இவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை தான் என்னை இவர்களின் மீதான பார்வையை மாற்றியது

அந்த நம்பிக்கை பிழைப்பு மீதானது அல்ல. உழைப்பு மீதான பெரும் விருப்பம். அது தான் அவர்களை என்றுமே உயிரோட்டம் நிறைந்த புதியநீராக ஓடச்செய்கிறது

சாமான்யர்கள் குரல் ஒலிக்கிறது. அதை தடைசெய்வது பெரிய முதலீட்டு நிறுவனங்கள் அல்ல. அதை குரலாகவே எண்ணாத நடைபாதை மானிட பரிகாசம் தான்

குப்பைகளை வாங்குபவர்கள் பெருமையாகவும் போடுபவர்கள் கீழாகவும் பார்க்க நாம் என்றைக்கு கற்றுக் கொள்கிறோமே அன்றே அந்த குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும்

நான் இருக்க மாட்டேனா

நான் இருக்க மாட்டேனா

உன்னை நான் வெறுக்க வேண்டுமென்றால்

ஓராயிரம் முறையாவது நான் சுக்குநூறாக உடைய வேண்டும்


ஒருமுறையாவது உன் நினைவுகளை என்னுள்ளே நிறுத்திட வேண்டும்

ஒருகணமேனும் உன் காதலை மறுத்திட வேண்டும்

இதெல்லாம் நடக்குமாயின் ஒரு நொடியேனும் என்னை கொன்றிட வேண்டும்

என்னை பிரிய வேண்டும் என்று முடிவானப்பின் எதற்கு பிரிவு என்கிற உறவு

கசப்பாகி போனது நான் மட்டுமல்ல நம் காதலும் தான்

நீ நடந்து போன பாதையை என் காதலால் துடைக்கின்ற துயரம் அறிவாயா?

என்றோ நீ விட்டுச்சென்ற ஆடையின் கசங்கிய வாசனைகள் என்னை கேட்கின்றன கூடல் இதற்காக தானா என்று

உன் குறுஞ்செய்தியால் விடிந்த என் காலை பொழுது கானாமல் போனதோ

காஃபியுடன் காத்திருந்த கைகள் கட்டப்பட்டதோ

உன் உயரங்களை தாண்டாத காலனிகள் முட்கள் ஆனதோ

சாலைப் பயணங்களில் வேகத்தடைகள் விடைபெற்றுக் கொண்டதோ

இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை 😏

உன்னால் என்னைப் பிரிந்து இருக்கமுடியுமானால் நான் இருக்க மாட்டேனா? மாறுகிறேன், மறக்கிறேன் மனம் திறக்கிறேன்

இதோ, எனக்கான காலை, காஃபி, காலணிகள், வேகத்தடைகள்

நானும் உனக்கு சொல்கிறேன்

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...